
வேடசந்தூர் அருகே வீட்டில் தனியா இருந்த வயதான தம்பதியினரை கத்தியால் வெட்டி 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்த பேரன் மற்றும் கூட்டாளி கைது
திண்டுக்கல், வேடசந்தூர் அருகே உள்ள கணக்கனூரை சேர்ந்தவர்கள் வேளாங்கண்ணி ஆரோக்கியம்(வயது 70), கேத்தரின்மேரி(வயது 64) தம்பதியினர்.
இவர்கள் இருவரும் தங்களது தோட்டத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த சனிக்கிழமை இரவு இவர்கள் இருவரும் தோட்டத்து வீட்டில் தனியாக இருந்தபோது, முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.
அதன் பின்னர் கணவன் மனைவி இருவரையும் கம்பால் தாக்கி, கத்தியால் வெட்டி கேத்தரின்மேரி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச்சென்றனர்.
இதில் காயமடைந்த வேளாங்கண்ணி ஆரோக்கியம், கேத்தரின் மேரி ஆகிய இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் எரியோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் முகமூடி கொள்ளையர்களில் ஒருவர் கேத்தரின் மேரியின் தங்கையின் பேரன் அருண்குமார் (வயது 37) என்பது தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து வேடசந்தூர் துணை கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து திண்டுக்கல்லில் பதுங்கி இருந்த அருண்குமார் மற்றும் அவரது கூட்டாளியான உண்டார்பட்டி பகுதியை சேர்ந்த பிரபு (வயது 25) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.