பண்ருட்டி அருகே காட்டுக்கூடலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை உடைத்து சேதப்படுத்தும் இளைஞர், கண்காணிப்பு கேமராக்களை உடைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள காட்டுக்கூடலூரில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பள்ளி வளாகத்திற்குள் நான்கு இளைஞர்கள் சுற்றி திரிந்தனர். அப்போது, அவர்களுடன் வந்த இளைஞர் ஒருவர் பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை தடியால் உடைத்து சேதப்படுத்தினார்.
மேலும் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் அந்த இளைஞர் கற்களை வீசி உடைத்து சேதப்படுத்தி உள்ளார். பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் இளைஞரால் உடைத்து சேதப்படுத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக முத்தாண்டிக்குப்பம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.