நீலகிரியில் பனிக்காலத்தில் நிலவிய கடுமையான
உறைபனியின் தாக்கம் காரணமாக வனப்பகுதிகளில் வறட்சி தொடங்கியது. தொடர்ந்து அதிகரித்து வந்த வெயிலின் தாக்கம் காரணமாக புல்வெளிகள் பசுமை இழந்தும் நீர் நிலைகள் வறண்டும் காணப்பட்டன. உணவு‌, தண்ணீர் தேடி வனவிலங்குகள் இடம் பெயர்ந்து வந்தன. பல இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டு வந்தது. காட்டுத்தீ அபாயத்தை தடுக்க தொடர் கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக நீலகிரியில் அவ்வப்போது பெய்து வரும் கோடை மழையால் காட்டுத்தீ அபாயம் குறைந்து வனங்களில் வசந்தம் திரும்பி வருகிறது. தற்போது பெய்து வரும் இந்த கோடை மழையால் நீர் நிலைகள் புத்துயிர் பெற்று வருகின்றன. குன்னூர் மலைச்சரிவு வனப்பகுதியில் உள்ள நீரோடைகளிலும் தற்போது நீரோட்டம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது . யானைகள் குடும்பமாக சென்று தாகம் தணித்து வருகின்றன.