நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி விஷம் குடித்து தற்கொலை. மனமுடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை ராதாபுரம் போலீசார் விசாரணை.

நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரம் அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் நந்தகுமார் (30). இவரது மனைவி கீதா (24). இவர்களுக்கு திருமணம் ஆகி சுமார் ஐந்து ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. நந்தகுமார் தினமும் குடித்துவிட்டு கீதாவை அடித்து துன்புறுத்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதன் காரணமாக மனைவி கீதா வீட்டில் இருந்த தலைக்கு தேய்க்க கூடிய ஹேர் ஆயில் குடித்து வீட்டில் மயங்கி கிடந்ததாக தெரிகிறது.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் கீதாவை மீட்டு கள்ளிகுளம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கீதா இறந்துள்ளார். கீதா இறந்த செய்தி நந்தகுமார் அறிந்ததும் தன் மனைவி இறந்ததற்கு நாம் தான் காரணம் என எண்ணி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ராதாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி திருநெல்வேலி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டதன் காரணமாக கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.