திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம் வரக்கூடிய பக்தர்கள் கடலில் புனித நீராடி முருகனை வழிபட்ட பின்னர் கடற்கரையில் குடும்பத்துடன் பொழுது போக்கினை கழித்து செல்வர்.

இன்று பங்குனி உத்திரம் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கடலில் நீராடி கொண்டிருந்தனர் அப்போது திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் இருந்து 300 மீட்டர் தொலைவிற்கு உள்ள கடலில் கடல் ஆமை ஒன்று இறந்து கரை ஒதுங்கியது. ஆமையின் கழுத்து பகுதியில் இரத்தம் படிந்து காணப்பட்டது. இந்த ஆமை சுமார் மூன்றடி நீளமும் 30 கிலோ எடையும் இருக்கும் என்று தெரிகிறது. இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இந்த ஆலிவ் ரெட்லி வகை ஆமை. திருச்செந்தூர் முதல் ராமேஸ்வரம் கடலில் அதிகளவில் காணப்படும் இனமாகும்.

தற்போது ஆமைகள் கடலில் முட்டையிட்டு இனபெருக்கம் செய்யும் காலம் என்பதால் இந்த ஆமையானது முட்டை இடுவதற்காக கரை ஒதுங்கும் போது அலைகளின் சீற்றத்தால் அடிப்பட்டும் அல்லது பாறைகளில் வேகமாக மோதியதால் காயங்கள் ஏற்பட்டும் இறந்திருக்கலாம் அல்லது ஏதாவது மீன்பிடி படகுகளில் மோதி இறந்திருக்கலாம் என தெரிகிறது. இதற்கிடையே கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியினர் இறந்த நிலையில் கடலில் கிடந்த ஆமையை மீட்டு கடற்கரை மணலில் வைத்தனர் அதனை தொடர்ந்து கால்நடை மருத்துவமனையில் ஒப்படைத்தபின்பு இறந்த ஆமைக்கு உடற் க்கூறு ஆய்வு செய்யப்பட்ட பின்னர் புதைக்கப்படும்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கடந்த மாதம் மட்டும் திருச்செந்தூர் கடற்கரையில் 5 ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருந்தது. இந்த நிலையில் இன்று திருச்செந்தூர் கடலில் 30 கிலோ எடைகொண்ட மூன்றடி நீளமுடைய கடல் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது போன்று சமீப நாட்களாக கடல் வாழ் உயிரினங்களான டால்பின், ஆமை உள்ளவைகள் தொடர்ந்து அடுத்தடுத்து இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருவது திருச்செந்தூர் பொதுமக்களிடையே பேரதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.