திருப்பூர் மாவட்டத்தில் ஜே.சி.பி. உரிமையாளா்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனா். இதன் காரணமாக கட்டுமான பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட ஜே.சி.பி. எந்திர உரிமையாளா்கள் உள்ளனா். இவா்கள் பலரும் ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் தொழில் செய்து வருகிறார்கள். இதன் வாயிலாக தொழிலாளா்கள் பலரும் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் டீசல், உதிரிபாகங்கள், புதிய வாகன வரி உயா்வு மற்றும் இன்சூரன்ஸ், சாலை வரி உயா்வு போன்ற காரணங்களால் மினிமம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். அடுத்த ஒரு மணி நேரத்திற்கு ரூ.1400 வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட எர்த் மூவா்ஸ் உரிமையாளா்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனா்.அதன்படி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினா்.
இந்த போராட்டம் வருகிற 14ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. போராட்டத்தின் காரணமாக தண்ணீர்பந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஜே.சி.பி. எந்திரத்தை நிறுத்தி வைத்துள்ளனா். போராட்டத்தின் காரணமாக கட்டிட கட்டுமான பணிகள், சாலை பணிகள், சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யும் பணி, நிலம் சமன்படுத்தும் பணி, விவசாய பணிகள் என்பது உள்பட பல்வேறு பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.டீசல் விலை உயா்வு உள்ளிட்ட பல்வேறு விலை உயா்வின் காரணமாக கடுமையாக பாதித்து வருகிறோம்.
இதனால் எங்களது கோரிக்கையை தொிவிக்கும் வகையில் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளோம். ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிற தொகை எங்களுக்கு போதுமானதாக இல்லை. நாங்கள் நஷ்டத்தை சந்திக்கும் நிலையில் உள்ளதால், தவிர்க்க முடியாத சூழலில் இந்த போராட்டத்தை நடத்துகிறோம். இதற்கு வாடிக்கையாளா்கள் ஆதரவை தர வேண்டும். என்றனா்.
