திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தர்பூசணி பழம் சாப்பிடக் கூடாது என்று தவறான வதந்தி பரப்பிய உணவு பாதுகாப்பு அதிகாரியை கைது செய்ய கோரி நூற்றுக்கும் மேற்பட்ட தர்பூசணி விவசாயிகள் ஊர்வலமாக வந்து சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்- அப்போது அவர்கள் வெளி நாட்டு குளிர்பானங்களை கொட்டி தங்களது எதிர்ப்பை காட்டியதால் பரபரப்பு ஏற்ப்பட்டது .

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளால் பயிரிடப்பட்ட தர்பூசணி பழங்களை சாப்பிடக்கூடாது என உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் என்பவர் தவறான அறிக்கை வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனால் பொதுமக்கள் தர்பூசணி பழங்களை வாங்கி சாப்பிடுவதில் அச்சம் ஏற்பட்டு வருகின்றது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளால் பயிரிடப்பட்டுள்ள லட்சக்கணக்கான ஏக்கர் தர்பூசணி பழங்கள் வியாபாரிகளால் வாங்கப்படாமல் விவசாய நிலங்களில் அழுகி போகின்ற அவல நிலை ஏற்பட்டு வருகின்றது.

இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று திண்டிவனம் பகுதிகளில் உள்ள தர்பூசணி விவசாயிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் திவ்யன் ஷூ நிகத்திடம் மனு அளித்தனர்.

முன்னதாக அவர்கள் வெளி நாட்டு குளிர்பானங்களுக்கு ஆதரவாக தர்பூசணி பழம் சாப்பிடக்கூடாது என அறிக்கை வெளியிட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டதுடன், வெளிநாட்டு குளிர்பானங்களை கீழே கொட்டி தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி
னார்கள். இதனால் இந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது .