நாகர்கோவில்.

தமிழ்நாடு காவல்துறையில் காவல் உதவி ஆய்வாளர் காலியிடங்கள் மொத்தம் 1,299 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்காக குமரி மாவட்ட இளைஞர்களுக்கு எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் படி இலவச பயிற்சி நடத்த குமரி மாவட்ட காவல் துறை சார்பில் பணியில் அனுபவம் பெற்றவர்கள், கல்வியாளர்கள், காவல்துறை அதிகாரிகள் என பல தரப்பட்ட வல்லுனர்கள் இணைந்து உதவி ஆய்வாளர் தேர்வில் குமரி மாவட்ட இளைஞர்கள் அதிக அளவில் வெற்றி பெற பயிற்சி அளிக்கிறார்கள்.

இந்த பயிற்சி வகுப்பு, நாகர்கோவில் மறவன் குடியிருப்பில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று காலை தொடங்கியது. இளைஞர்கள், இளம்பெண்கள் என சுமார் 150 பேர் பங்கேற்றனர். மக்களின் வாழ்க்கையில் காவல்துறையினர் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். அதே போல இளைஞர்களுக்கும் காவல் துறைக்கும் நல்லுரவினை எற்படுத்தும் வகையிலும் போதையை விட்டு புத்தகம் எடுப்போம் என்ற சமுக சிந்தனையுடன் வெற்றி பாதை” என்ற தலைப்பில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஸ்டாலின் தெரிவித்தார்.