காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய திருச்சி எஸ் பி .

திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் நடைபெற்று வரும் மதுரை காளியம்மன் கோயில் தேர் திருவிழாவில் பாதுகாப்புக்கு வந்த போலீசார் மனிதநேயத்துடன் நடந்து கொண்ட நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

திருச்சி மாவட்டம், தொட்டியம் மதுரை காளியம்மன் கோயிலில் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. வருடம் தோறும் பங்குனி மாதம் நடைபெற்று வரும் இந்த தேர்த் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம் .எனவே அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.இந்த ஆண்டு திருச்சி போலீஸ் எஸ் பி செல்வ நாகரத்தினம் நேரடி மேற்பார்வையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு திருத்தேர் உற்சவத்தின் போது திடீரென மழை பெய்தது.


பொதுமக்கள் மழையிலிருந்து நனைவதை தவிர்க்க சிதறி ஓடினர். அப்போது கைக்குழந்தையுடன் ஒரு பெண் மழையில் நனைந்தவாறு ஒதுங்க இடம் இன்றி தவித்தார்.


பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்த போலீசார் இதை கவனித்தனர். உடனடியாக கூட்டத்தை கட்டுப்படுத்தி தடுத்து நிறுத்துவதற்காக பயன்படுத்தப்படும் இரும்பு தடுப்பு பதாகையை தலைக்கு மேலே உயர்த்தி பிடித்து கை குழந்தையும், தாயும் நனையாதவாறு பாதுகாப்பளித்தனர். மழை நின்றவுடன் கைக்குழந்தையுடன் இருந்த பெண் போலீசாருக்கு நன்றி தெரிவித்து அங்கிருந்து சென்றார். இந்த நிகழ்வை அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் செல்போனில் படம் பிடித்தனர். அந்த வீடியோ தற்போது whatsapp வைரலாக மாறியுள்ளது.


போலீசாரின் மனிதநேயமிக்க செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. காக்கிச்சட்டை உடுப்பில் கூர்மையான பார்வையுடன் விரைப்பாக நிற்கும் போலீசாரின் இதயத்திலும்
மனித நேயம் உண்டு என்பதை இச்செயல் உணர்த்துவதாக அமைந்திருந்தது. இந்நிலையில் மழை நேரத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்ட காவலர்களை பாராட்டும் விதமாக திருச்சி போலீஸ்
எஸ் பி செல்வ நாகரத்தினம் தொட்டியம் காவல் நிலையத்தில் வைத்து தாயையும் குழந்தையும் பாதுகாத்த காவலர்கள் முருகராஜ்,ஜாஸ்வா சில்வெஸ்டர்,சந்திரமோகன்,ஸ்டீபன் ராஜ் ஆகிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.


அப்போது முசிறி போலீஸ் டிஎஸ்பி சுரேஷ்குமார் தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.