திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கெச்சானிபட்டியை சேர்ந்தவர் பிரேம்குமார், கட்டிடத் தொழிலாளி.காலை பிரேம்குமார் ஒரு மோட்டார் சைக்கிளில் தனது உறவினரான மீனா(34) என்பவரை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல்லுக்கு கட்டிட வேலைக்குச் சென்றார்.

வடமதுரையில் வேடசந்தூர் பிரிவு அருகே திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையை மோட்டார் சைக்கிள் கடந்தது. அப்போது, உடுமலைப்பேட்டையை சேர்ந்த கிருஷ்ண பிரசாத் என்பவர் திருச்சி நோக்கி ஒட்டிச்சென்ற கார் திடீரென பயங்கரமாக மோதியது.
மோட்டார் சைக்கிளின் மீது மோதிய கார் கட்டுப்பாட்டு இழந்து சாலையோரம் இருந்த மண் மேட்டின் மீது ஏறி அங்கு தேங்கி இருந்த கழிவுநீர் வாய்க்காலை தாண்டி பறந்து சென்று விழுந்தது.


இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பிரேம்குமாருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மீனா மற்றும் காரில் இருந்த கிருஷ்ண பிரசாத்தின் மனைவி சண்முகப்பிரியா ஆகிய இருவரும் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் இந்த விபத்து குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் மண் மேட்டின் மீது ஏறி பறந்து சென்று விழுந்த சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.