
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதியதாக சார்பு நீதிமன்றம் தொடங்கப்பட்டது.
இதற்கான நீதிபதியும் நியமிக்கப்பட்டு வழக்குப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், புதியதாக நீதிமன்ற வளாகத்தின் அருகில் சார்பு நீதிமன்ற நீதிபதி குடியிருப்பு கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு ரூபாய் ஒரு கோடியே 33 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியின் மூலம் சார்பு நீதிமன்ற நீதிபதி குடியிருப்பு கட்டுமான பணி தொடங்குவதற்கான நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை நீதிபதி இருசன் பூங்குயில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கலந்து கொண்டு சார்பு நீதிமன்ற நீதிபதி குடியிருப்பு கட்டும் பணியினை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி ஸ்ரீராம், உளுந்தூர்பேட்டை சார்பு நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம் மற்றும் குற்றவியல் நீதிபதிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர.