திருப்பூர் வளையங்காடு பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ. இவர் 20 தையல் இயந்திரங்கள் வைத்து பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் நிறுவனத்தின் பின்பகுதியில் உள்ள அறையில் குடும்பத்துடன் தங்கி வருகிறார்.

கடந்த 7 ஆண்டுகளாக பின்னலாடை நிறுவனம் நடத்தி வரும் நிலையில் நேற்று இரவு வழக்கம் போல நிறுவனத்தை அடைத்து விட்டு பின்பக்கம் உள்ள அறையில் குடும்பத்துடன் உறங்கி கொண்டிருந்தார்.

திடிரென வீட்டில் மின்கசிவு காரணமாக புகை சூழ்ந்துள்ளது. இதனை தொடர்ந்து குடும்பத்தை வெளியே அழைத்து வந்த இளங்கோ தீயை அணைக்க முற்பட்டுள்ளார் அப்போது வீட்டில் இருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் வீடு மற்றும் பனியன் நிறுவன கட்டிடம் முழுமையாக இடிந்து தரைமட்டமானது.

சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது. அனுப்பர்பாளையம் போலீசார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிலிண்டர் வெடித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.