திருப்பூர் கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க அவசர பொதுக்குழு கூட்டம் நேற்று திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த தெக்கலூரில் நடைபெற்றது. இதில் 2022ல் பேச்சுவார்த்தையில் உடன்பாடு செய்யப்பட்ட கூலி உயர்வை இது வரையிலும் வழங்காததால் விசைத்தறி உரிமையாளர்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாவதாகவும், விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் தங்களுக்கு நியாயமான கூலி உயர்வை வழங்க வேண்டும் என கோரி இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.
அதன்படி திருப்பூர் கோவை மாவட்டங்களில் உள்ள 10 ஆயிரம் கூடங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் நிறுப்பட்டுள்ளன. இதனால் 35 கோடி வரை நாள் ஒன்றுக்கு உற்பத்தி பாதிக்கப்படும் எனவும் ஒரு லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாக 2 லட்சம் தொழிலாளர்கள் என மூன்று லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்தனர். 14 கட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் கால வரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கி உள்ளதாகவும் மாநில அரசு தலையிட்டு தொழிலாளர் வாழ்வாதார பிரச்சனையில் சுமூக தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.