திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் ஒன்றாகவும், மனநோய் தீர்க்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயிலில் தேர்த் திருவிழா முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி தொடங்கியது.
இதைத்தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளன.
வருகிற மார்ச் 12 மற்றும் 13 ஆம் தேதி மாலை 3 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் தேரோட்டம் நடைபெற உள்ளது.
கொடியேற்றம் நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று காலை விநாயகர், திருமுருகநாதர், சோமஸ்கந்தர், அம்பாள், வள்ளி, தெய்வானை, சண்டிகேசுவரர் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்ச்சிகளில் மார்ச் 7- ஆம் தேதி வெள்ளிக்கிழமை சூரிய சந்திர மண்டல காட்சிகள், 8- ஆம் தேதி பூத வாகனம், சிம்ம வாகன காட்சிகள், 9-ஆம் தேதி புஷ்ப விமான காட்சி, 10- ஆம் தேதி பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல், 11- ஆம் தேதி திருக்கல்யாணம், யானைவாகன, அன்ன வாகன காட்சி 12, 13 ஆம் தேதி திருத்தேர் வடம்பிடித்தல்,14 ஆம் தேதி பரி வேட்டை, குதிரை, சிம்மவாகன காட்சி, தெப்பத்தேர் நிகழ்ச்சியும், 15ஆம் தேதி ஸ்ரீசுந்தரர் வேடுபறி திருவிழாவும் நடைபெறுகிறது.
16ஆம் தேதி பிரம்மதாண்டவ தரிசனக் காட்சியும், 17ஆம் தேதி மஞ்சள் நீர் திருவிழா,மயில் வாகனக்காட்சி ஆகியவற்றுடன் தேர்த்திருவிழா நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.