அய்யா வைகுண்டரின் அவதான தின விழாவை, அய்யாவழி பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் இந்த ஆண்டும் அய்யா வைகுண்டரின் அவதார தின விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இதற்காக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருக்கிறது. அய்யா வைகுண்டர் அவதார தின விழாவில் கலந்து கொள்வதற்காக திருச்செந்தூர், திருவனந்தபுரம், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேற்று இரவே நாகர்கோவில் நாகராஜா கோவிலுக்கு வந்து தங்கினர்.
இன்று காலை 6 மணிக்கு நாகராஜா கோவில் திடலில் இருந்து அய்யா வைகுண்டர் அவதார தின விழா ஊர்வலம் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட அய்யா வாகனத்துக்கு முன்னால் முத்துக்குடைகளை கைகளில் ஏந்தியபடி, மேளதாளங்கள் முழங்க தலைப்பாகை அணிந்த அய்யா வழி பக்தர்கள் சென்றனர். அப்போது அவர்கள், அய்யா சிவ… சிவா… அரகரா… அரகரா… என்ற பக்தி கோஷம் எழுப்பியபடி சென்றனர். ஊர்வலத்தில் சிறுவர்- சிறுமிகளின் கோலாட்டம் நடந்தது. இந்த ஊர்வலம் கோட்டாறு, இடலாக்குடி, சுசீந்திரம், ஈத்தங்காடு, வடக்கு தாமரைகுளம் வழியாக சுவாமி தோப்பு தலைமைப்பதியை அடையும்.