சிவகங்கையில் உள்ள வடை கடைகளில் உணவு பொருட்களை செய்திதாள் , நோட்டீஸ் போன்ற பேப்பர்களில் பார்சல் மடித்து
தருவதாக பொது மக்கள் அளித்த புகாரை தொடர்ந்து ஆட்சியர் உத்தரவின் பேரில் சிவகங்கை பேருந்து நிலையம் காந்திவீதி, கோர்ட்வாசல், நேருபஜார், பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

அப்போது செய்திதாள் , வேஸ்ட் பேப்பர்களில் வடை பஜ்ஜி போன்ற உணவுப் பொருட்களை கட்டித் தந்த கடைகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். சிவகங்கை நகர் முழுவதும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு வணிக கடைகள் செயல்பட்டுவருகின்றதுஇதில் டீக்கடை, வடைக்கடை மற்றும் சாலையோர தள்ளுவண்டி கடைகளில் உணவு பொருட்கள் தரமின்றி தயாரிக்கப்பட்டதையும்,
காலாவதியான தரமற்ற மாவு உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றி குப்பையில் கொட்டினர்.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சரவணன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் தலைமையில் நகரில் உள்ள பல்வேறு கடைகளில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். செய்திதாளில் எழுத்துக்களை அச்சேற்ற பயன்படுத்தப்படும் மையில் காரியம், கார்பன் போன்ற வேதி பொருட்கள் பயன்படுத்துவதால் அதனை உட்கொள்ளும் போது,புற்றுநோய் வரை ஏற்பட வாய்ப்பிருப்பதாக கடைக்காரர்களிடம் அதிகாரிகள் எச்சரித்தனர். உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் (பேக்கிங்) ஒழுங்குமுறை 2018 ன் படி 10 க்கும் மேற்பட்ட கடைகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.