
தமிழ்நாட்டின் அரசியல் சூழல் மிகுந்த பரபரப்பிற்கு உள்ளாகியிருக்கிறது. மத்திய பாஜக அரசிற்கும் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கும் இடையிலான அரசியல் முரண்பாடுகள் தீவிரமடைந்திருக்கின்றன. தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நிதி உரிமைகள் மறுப்பு, தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை திணிப்பு, தொகுதி மறு சீரமைப்பு உள்ளிட்ட சிக்கல்கள் தீவிரமாகி உள்ள நிலையில் எதிர்கட்சியான அதிமுகவும், பாஜக வை எதிரியாக குறிப்பிட்ட விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் மிகவும் அமைதி காக்கின்றன, அல்லது பாஜகவின் கோபத்திற்கு ஆளாகாத வகையில் பேசி வருகின்றன.
நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டும் மத்திய அரசு
மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டி வருவதாக குற்றம் சாட்டி திமுக தொடர்ந்து போராட்டங்களையும் நடத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் இயற்கை பேரிடர்களால் ஏற்பட்ட சேதாரங்களுக்கு நிவாரணத் தொகையாக 37,907 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு கேட்டிருந்த நிலையில் வெறும் 276 கோடி ரூபாயையே பாஜக அரசு ஒதுக்கியிருந்தது.
அதேபோல இறுதியாக வரி வருவாய் பகிர்வாக மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் உத்திர பிரதேசத்திற்கு 31039 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு வெறும் 7057 கோடி ரூபாயையே மத்திய அரசு ஒதுக்கியிருந்தது. நாட்டின் ஒட்டுமொத்த வரி வருவாய்க்கு தமிழ்நாடு மிகப்பெரிய அளவில் பங்களித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையிலும் தமிழ்நாட்டிற்கு சிறப்புத் திட்டங்கள் ஒதுக்கப்படவில்லை. தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்து வந்த சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. கோவை, மதுரை புதிய மெட்ரோ திட்டங்களுக்கான அறிவிப்பும் இடம் பெறவில்லை.
முதல்வர் கடிதம் மூலமும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேரிலும் பல்வேறு முறை மத்திய அரசை வலியுறுத்திய போதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்குரிய ரூ.3,300 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் இழுத்தடித்து வருகின்றது.
இவற்றை கண்டித்து பிப்ரவரி 6 ஆம் தேதி திமுக தமிழ்நாடு முழுமைக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து பொதுக் கூட்டங்களை நடத்தி திமுக தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தது.
முற்றும் மும்மொழிக் கொள்கை விவகாரம்
ஒருபுறம் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடுகளினால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 2152 கோடி ரூபாயை வழங்க வேண்டுமானால் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருப்பது தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதனை பிளாக் மெயில் நடவடிக்கை என கண்டித்துள்ளார்.
மேலும் மும்மொழிக் கொள்கையின் மூலம் இந்தியை திணிக்க பாஜக அரசு முயற்சிக்கிறது எனக் கூறி மீண்டும் ஒரு மொழிப்போருக்கு தமிழ்நாட்டை பாஜக தூண்டுகிறது என திமுக வினர் ரயில் நிலையங்களில் இந்தி அழிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேகமெடுக்கும் தொகுதி மறுசீரமைப்பு சர்ச்சை
2026 ஆம் ஆண்டிற்கு பிறகு நடக்க இருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையின் மூலம் தமிழ்நாட்டின் மக்களவை தொகுதிகள் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறி தமிழ்நாடு அரசு மார்ச் 5 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கான அழைப்பை விடுத்துள்ளது.
1971 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே தமிழ்நாட்டில் தற்போதுள்ள 39 மக்களவைத் தொகுதிகள் தீர்மானிக்கப்பட்டன. 1971க்கு பிறகு மத்திய அரசு வலியுறுத்திய குடும்ப கட்டுப்பாடு போன்ற மக்கள் தொகை கட்டுபடுத்தல் நடவடிக்கைகளை தமிழ்நாடு சிறப்பாக கையாண்டது, ஆனால் உத்திரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்கள் அதனை கட்டுப்படுத்த தவறிவிட்டன.
இந்நிலையில் தற்போது உள்ள மக்கள் தொகையின் அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டால் தமிழ்நாடு தனது இடங்களை கணிசமாக இழக்க நேரிடும், ஒட்டுமொத்தமாக தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை புதிய அளவில் உயர்த்தப்பட்டாலும் வட இந்திய மாநிலங்களே கூடுதல் இடங்களைப் பெற வழிவகுக்கும். இது நாட்டின் கூட்டாட்சி அமைப்பிற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதனை தடுத்து தமிழ்நாட்டிற்கு உரிய நியாயமான இடத்தை வழங்க வேண்டும் என்பதை திமுக வலியுறுத்தியுள்ளது.
பாஜகவை விமர்சிப்பதில் எதிர்கட்சிகளின் தயக்கம்
ஒருபுறம் தமிழ்நாடு அரசிற்கும் மத்திய பாஜக அரசிற்கும் இடையில் உரிமை சார்ந்த போராட்டங்கள் தீவிரமாகி வரும் சூழ்நிலையில் அதிமுக, தவெக போன்ற கட்சிகள் பாஜக மீதான தங்களது விமர்சனங்களை வலுவாக முன்வைக்க தயங்கி வருகின்றன. 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற பொதுத் தேர்தல் வரவிருக்கும் சூழலில் பாஜக விற்கு எதிரான விமர்சனங்களை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வைப்பதற்கு பின்னால் ரெய்டு, கூட்டணி உள்ளிட்ட பல்வேறு கணக்குகள் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய் தனது கொள்கை எதிரி என பாஜக வைப் பற்றி கூறினார். அவர் பாஜகவையும் திமுகவையும் தீவிரமாக எதிர்த்து அரசியல் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் திமுக வை மட்டுமே பிரதானப்படுத்தி அரசியல் செய்து வருகிறார். அவருக்கு மத்திய அரசு
Y பிரிவு பாதுகாப்பு வழங்கியிருப்பதும் விஜய் பாஜகவை விமர்சிக்க தயங்குவதும் கூட்டணி கணக்குகளை உள்ளடக்கியதா? எனும் சந்தேகத்தை அவரது தொண்டர்களுக்கும் உருவாக்கியிருக்கிறது.
தற்போதுள்ள அரசியல் சூழலில் மத்திய அரசிற்கு எதிராக தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுக்காக்கும் வகையில் ஒரு வலுவான எதிர்க்கட்சிக் குரல் இல்லாமல் இருந்து வருகிறது. திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளுமே அதனை முதன்மைப்படுத்தி செயல்பட்டு வருகின்றன.