கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கள்ளபள்ளி முதல் நிலை ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.ஊராட்சி பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் முறையாக குடிநீர் வழங்கவில்லை என்றும்,

15 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் தண்ணீர் கூட கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசுவதாகவும் கூறப்படுகிறது.இது குறித்து பலமுறை ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள காரணத்தால் ஆவேசமடைந்த பெண்கள்இன்று சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணராயபுரம் கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இரண்டு நாட்களுக்குள் இதற்கு தீர்வு கண்டு ஊராட்சி பகுதிகளில் குடிநீர் தடையின்றி கிடைக்க வழி செய்வதாக உறுதியளித்ததை எடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.