தென்காசி மாவட்டம், இலத்தூர் அருகே உள்ள மதினாப்பேரிகுளக் கரையில் கடந்த 11 ஆம் தேதி காலையில் எரிந்த நிலையில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக பல்வேறு இடங்களில் பதிவாகியுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.சம்பவம் நடந்த இடத்திற்கு ஒரு கார் ஒன்று வந்து சென்றது அருகாமையில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தன. அந்த காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அந்த காரின் உரிமையாளரிடம் விசாரித்துள்ளனர்.அந்த காரை தனது நண்பரான சிவகாசியை சேர்ந்த ஜான் பிரேம்ராஜ் என்பவர் எடுத்துச் சென்று இருக்கிறார் என்று அவர் தெரிவிக்கவே ஜான் பிரேம் ராஜாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது, இலத்தூர் பகுதியில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தனது மனைவி கமலி தான் என்றும், நான்தான் அவளை கொலை செய்து எரித்ததையும் ஜான் ஒப்புக்கொண்டார்.
வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த ஜான் பிரேம்ராஜும், கமலியும் , காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.இவர்களுக்கு தற்போது 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.கமலிக்கும் அவர் வசித்து வரும் பகுதியை சேர்ந்த வேறு ஒரு நபருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது கணவரான ஜானுக்கு தெரிய வரவே, இதுதொடர்பாக கமலியிடம் கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ஜான் காமலியை அடித்து கொலை செய்துவிட்டு, அவரது உடலை அவரது நண்பர் காரில் வைத்து இரண்டு நாட்களாக பல இடங்களில் சுற்றி வந்துள்ளார்.அதனைத்தொடர்ந்து, ஜான் அவரது சகோதரரான தங்க திருப்பதி உதவியுடன் கமலியின் சடலத்தை தென்காசி அருகே எடுத்து வந்து எரித்துள்ளனர். இது தொடர்பாக ஜான் பிரேம் ராஜ் (30) அவரது சகோதரர் தங்க திருப்பதி(22) மற்றும் கார் டிரைவர் அருண்குமார் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது .