(26.11.2024)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்பு கடற்கரையில் கடல் அரிப்பு. 10 அடி ஆழத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் பக்தர்களை பாதுகாப்பாக குளிக்க காவல்துறையினர் அறிவுறுத்தல்

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்டு வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.
கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி கோவிலில் சுவாமி தரிசனம் செய்வார்கள். மேலும் பௌர்ணமி நாட்களில் கோவில் கடற்கரையில் இரவில் குடும்பத்தோடு தங்கி வழிபாடு செய்வார்கள்.
இந்த நிலையில் கோவில் முன்புள்ள கடற்கரையில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் சுமார் 25 அடி நீளத்திற்கும் 10 அடி ஆளத்திற்கும் இந்த கடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் பக்தர்கள் கடற்கரையில் கோவில் முன்புள்ள படிக்கட்டு பகுதியில் இருந்து கடலுக்குள் இறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் அதிக அளவிலான கற்கள் உள்ளது. எனவே அந்த பகுதியில் பக்தர்கள் நீராட இயலாத சூழல் உள்ளது.
மேலும் கோவில் கடற்கரையில் கடலில் சீற்றம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் கடற்கரையில் நீராட வருகை தரும் பக்தர்கள் குடும்பத்தோடு நின்று ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
கோவில் கடற்கரை பணியாளர்கள், காவல்துறையினர் பக்தர்களை பாதுகாப்பாக குளிக்கும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும் கடற்கரை பகுதியில் ஆபத்து குறித்து தகவல் பலகை வைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.