திறம்பட செயல்பட்ட அதிகாரிகளுக்கு எஸ்பி நேரில் பாராட்டு

பொள்ளாச்சியை அடுத்த மகாலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (40).பல் மருத்துவராக உள்ள கார்த்திக் கடந்த ஜனவரி 12ஆம் தேதி குடும்பத்தினருடன் கேரளாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில்14 ஆம் தேதி கார்த்திக்கின் வீடு உடைக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவை உடைக்கப்பட்டு பீரோவில் இருந்து 136 சவரன் நகை மற்றும் 3 லட்சம் பணம் கொள்ளை போனது தெரிய வந்தது.இதனை அடுத்து மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் கார்த்திக் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் மேற்பார்வையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடும் பணிகள் நடைபெற்று வந்தன. தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சைபர் செல் உதவியுடன் போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் கொள்ளையர்கள் மதுரை மாவட்டத்தில் பிடிபட்டனர்.

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வைரமணி (24),மணிசங்கர் (32) கார்த்திக் (37) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட 136 சவரன் நகை, 3 லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.இந்த கொள்ளை சம்பவத்தில் திறன் பட செயல்பட்ட அதிகாரிகளுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்டாக்டர். கார்த்திகேயன் நேரில் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.மேலும் பொதுமக்கள் கொள்ளையர்களிடமிருந்து தங்களது உடைமைகளை காத்துக் கொள்ள வீடுகள்,பண்ணை வீடுகள் உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள்,எச்சரிக்கை ஒலிப்பான்கள் உள்ளிட்டவைகளை பொருத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.