நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தளமாகவும், ஆன்மீக பூமியாகவும் விளங்குகிறது கொல்லிமலை . கடல் மட்டத்திலிருந்து சுமார் 1500 அடி உயரம் கொண்டுள்ள இந்த கொல்லிமலைக்கு அடிவாரப் பகுதியான காரவள்ளியில் இருந்து 70 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பாதையாக உள்ளது .

மிகவும் குறுகலான ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட கொல்லிமலையில் விபத்துகளை தடுக்க சாலை வளைவுகளில் தடுப்புச் சுவர்களும் இரும்பு தடுப்புகளும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் மிகவும் ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகள் கண்டறியப்பட்டு சுமார் 32 வளைவுகளில் 1500 மீட்டர் தொலைவிற்கு ரப்பர் மூலம் உருவாக்கப்பட்ட உருளை விபத்து தடுப்பான்கள் அமைக்கும் பணி 10 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலை துறை சார்பாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

கொண்டை ஊசி வளைவுகளில் இரும்பிலான தடுப்புகளில் வாகனங்கள் மோதினால் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதை கருத்தில் கொண்டு தமிழக அரசு வெளிநாட்டு தொழில்நுட்பத்தில் உருளை விபத்து தடுப்பு அமைக்கும் பணியை தற்போது கொல்லிமலையில் துவங்கி விறுவிறுப்பான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த உருளை விபத்து தடுப்பான்கள் சிறிய விபத்து ஏற்படும் போது எந்த சேதமும் அடையாது. பெரிய விபத்துக்கள் ஏற்பட்டு உருளை தடுப்பான்கள் சேதம் அடைந்தால் அதை மற்றும் தனித்தனியாக மாற்றிக் கொள்ளலாம் என்பதும், இரவிலும் ஒளிரும் தன்மை கொண்டது என்பது கூடுதல் சிறப்பு .