தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் வசித்து வந்தவர் பிரசாத் (34), இவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.

கடந்த 23ஆம் தேதி உத்தமபாளையம் நீதிமன்றம் அருகே பிரசாத்தை ஒருவர் விரட்டி வந்து கத்தியால் சரமாரியாக தாக்கி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார்.

இதனை அறிந்த உத்தமபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரசாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

மேலும் இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை குற்றவாளிகளை தீவிர விசாரணை மேற்கொண்டு தேடி வந்தனர்.

விசாரணையில் பிரசாத்தை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியவர் அனிஷ் ரஹ்மான் (40) என்பதும் அவர் உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்து கோம்பை ரோடு பகுதியில் பதுங்கி இருந்த அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில்
அனீஸ் ரஹ்மானின் மனைவி பெயர் சித்தி ஜூனைதா (32), இவர்களுக்கு பையன் ஒருவர் இருந்துள்ளார். மேலும் அனீஸ் ரகுமானுக்கும் கொலை செய்யப்பட்ட பிரசாத்திற்கும் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அனீஸ் ரகுமான் சில மாதங்களுக்கு முன்பு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே ஒரே தெருவில் வசித்து வந்ததால் பிரசாத்திற்கும் அனீஸ் ரஹ்மானின் மனைவி சித்தி ஜுனேனதா விற்கும் இடையே தகாத பழக்கம் ஏற்பட்டு திருமணத்தை மீறிய தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே அனீஸ் ரகுமான் ஜாமினில் சிறைச்சாலையில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது மனைவிக்கும் பிரசாத்திற்கும் இடையே உள்ள தொடர்பு அவருக்கு தெரியவந்துள்ளது இதனால் கணவன் மனைவிக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனை நடைபெற்று வந்துள்ளது.

இதனை அடுத்து அவரது மனைவி அனீஸ் ரஹ்மானை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த அனீஸ் ரகுமான் ஏற்கனவே கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் பிரசாத்திற்கும் அவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாகவும் தற்போது மனைவியும் பிரிந்து சென்று விட்டதால் அந்த ஆத்திரத்தில் பிரசாத்தை தீர்த்து கட்ட முடிவு செய்து கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அவரை விரட்டிச் சென்று கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து அனீஸ் ரகுமான் தப்பி ஓடியுள்ளார்.

மேலும் இந்த கொலை சம்பவத்தில் அவரது உறவினர் உத்தமபாளையம் பகுதியைச் சார்ந்த முத்து என்பவரும் உடன் இருந்துள்ளார்.

இதனை அடுத்து உத்தமபாளையம் காவல்துறையினர் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.