ஈரோடு மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் என்.ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான இடங்களில் காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த என்.ராமலிங்கம் என்பவர் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் ஆவார். என்.ஆர் கன்ஸ்ட்ரக்‌ஷன் என்ற நிறுவனம் கட்டுமானம் மற்றும் சாலை செப்பணிடும் பணிகளை ஒப்பந்தம் மூலம் பெற்று செய்து வருகின்றனர். இவர்கள் கடந்த அதிமுக ஆட்சியின் போது , விதிகளுக்கு மாறாக ஒப்பந்தப்பணிகள் பெறப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் ரெய்டு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு , எடப்பாடி பழனிசாமியின் வலது கரமாக அறியப்படும் சேலம் இளங்கோவன் வீட்டில் நடந்த ரெய்டின் போதே , அதிமுக வை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வர நடவடிக்கை ஆரம்பம் ஆகிவிட்டதாக அரசியல் விமர்சகளால் கூறப்பட்டது. அதன் நீட்சியாக தான் இன்று எடப்பாடியின் நெருங்கிய உறவினர் வீட்டில் நடக்கும் ரெய்டையும் பார்க்க வேண்டியுள்ளதாக கூறுகின்றனர். இன்று காலை என்.ஆர் கன்ஸ்ட்ரக்‌ஷன் தொடர்புடைய இடங்களில் ரெய்டு என்ற தகவல் , எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவிக்கப்பட்டதும் சட்டப்பேரவைக்கு கூட செல்லாமல் அவரது வீட்டிலேயே இருந்துகொண்டதாகவும் , ரெய்டின் நடவடிக்கை தொடர்பாக தனது டெல்லி லாபிகளிடம் பேசிவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.