திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முக்கன்பாலம் என்ற இடத்தில் இன்று அதிகாலை சுற்றுலா வேன் மற்றும் ஆம்னி பேருந்து மோதிக்கொண்டன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன. இந்நிலையில் துவரங்குறிச்சி வனத்துறை அலுவலகம் எதிரே தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு டிங்கரிங் பவுடர் ஏற்றி சென்ற லாரியும் நின்றுகொண்டிருந்த நிலையில் அதன் பின்புறம் திருச்சி நோக்கிச்சென்ற திரவ ஆக்சிஜன் காலி சிலிண்டர் லாரி பலமாக மோதியது. இதில் ஆக்சிசன் லாரியின் முன்பகுதி முற்றிலும் நசுங்கியதால் அதனை ஓட்டிவந்த டிரைவர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஜமீர் அகமது (38) என்பவர் இடுபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவருடன் வந்த லாரி கிளீனர் அப்துல் சித்திக் (வயது 45) பலத்த காயம் அடைந்தார். சம்பவம் பற்றி தகவல் இந்த துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாட்டிற்குள் இருந்த லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனரை மீட்டனர். இதனையடுத்து பலத்த காயமடைந்த கிளீனர் அப்துல் சித்திக் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து துவரங்குறிச்சி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.