2026ல் மீண்டும் மக்கள் என்னை தோற்கடித்தாலும் ஏற்றுக்கொள்வேன் என்று கோவையில் சாட்டையடி போராட்டத்திற்கு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

தமிழக அரசியல் வரலாற்றில் வேறு எந்த அரசியல் கட்சி தலைவரும் அறிவிக்காத வினோதமான போராட்டத்தை தமிழக பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நேற்று அறிவித்தார். அதாவது, இன்று முதல் 48 நாட்களுக்கு காலில் செருப்பு அணிய மாட்டேன் எனவும் வீட்டுக்கு முன்பு எனக்கு நானே சாட்டையால் அடித்துக்கொள்வேன் என்று அறிவித்தார். அதன்படி, கோவை காளப்பட்டி நேரு நகரில் உள்ள அவரது வீட்டு முன்பு இன்று காலை 10 மணிளவில் சாட்டையடி போராட்டத்தை துவக்கினார். இதையொட்டி அவர் காலில் செருப்பு அணியவில்லை. காலை 10 மணிக்கு வீட்டின் கதவை திறந்து அண்ணாமலை வெளியே வந்தார். பச்றை நிற துண்டு, வேட்டி அணிந்திருந்தார். பின்னர் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் துண்டை இடுப்பில் அணிந்து கொண்டார். இதையடுத்து 6 அடி நீளம் கொண்ட நூல்களால் பின்னப்பட்ட சாட்டையை அண்ணாமலை உதவியாளர் கையில் கொண்டு வந்து கொடுத்தார். இந்த சாட்டையை தனக்கு தானே உடலில் அடுத்தது 8 முறை அடித்துக் கொண்டார். அவர் ஏற்கனவே அறிவித்தது 6 முறைதான். இதில் 2 முறை சாட்டை கழுத்தில் மாட்டிக்கொண்டதால் 8 முறை அடித்துக்கொண்டார். இதையடுத்து முன்னாள் பாஜ மாவட்ட தலைவர் நந்தகுமார் ஓடி வந்து கட்டி அணைத்து சாட்டையை அவர் கையில் இருந்து பறித்துக்கொண்டார். அதன்பிறகு இடுப்பில் கட்டியிருந்த துண்டை கழற்றிய பிறகு பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்து பேசும்போது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு ஆழந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். ஒன்றிய அரசு 7 நாட்கள் துக்கம் அறிவித்துள்ளது. எனவே பாஜ சார்பில் இன்று நடைபெற இருந்த போராட்டங்கள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றது. அடுத்த கட்டமாக கட்சி சார்பில் எந்த மாதிரியான போராட்டம் என்பது இன்று மாலை அறிவிக்கப்படும். இந்த சாட்டையடி போராட்டம் என்பது தனி மனிதனுக்கானது அல்ல. என்னை நான் விளம்பர படுத்திக்கொள்ளவும் அல்ல. இது தமிழர் மரபு. முருகனிடம் வேண்டும் போது, காவடி எடுப்பதும், சாட்டை அடிப்பதும், ஆண்டாண்டு காலமாக நமது முன்னோர் வைக்கும் வேண்டுதல். அதைத்தான் நானும் இன்று செய்துள்ளேன். நான் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த போது 10 வயது சிறுமி பாலியல் பலத்காரம் செய்து கொல்லப்பட்டார். நான் அந்த குற்றவாளியை கண்டுபிடித்து சிறுமியின் பெற்றோர் முன் நிறுத்தினேன். மகளை பிரிந்த அந்த தாய் குற்றவாளியை கண்டுபிடித்து கொடுத்து விட்டிர்கள். ஆனால் எனது மகள் எங்கே என்று கேட்டார். இது என் மனதில் ஆறாத வடுவாக மாறிவிட்டது. அது போன்ற நிகழ்வு தான் இன்றைக்கு சென்னையில் நடந்துள்ளது. இந்த விஷயத்தில் காவல்துறையை நான் குறை சொல்ல வில்லை. ஆனால் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டுள்ளது. நான் அறிவித்த இந்த போராட்டம் மாதிரி ஒவ்வொரு பாஜ தொண்டர்களும், அறிவிக்க வேண்டிய தேவை இல்லை. இது என்னோடு நிற்கட்டும். ஒரு வேளை நானே தவறு செய்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் உடலை வருத்தி நான் செய்த இந்த போராட்டம் எனக்கு பரிகாரமாக அமையட்டும். நமது சமுதாய மரபில் இந்த போராட்டம் ஒன்றும் புதிதல்ல. தமிழகத்தில் அறவெளி போராட்டத்திற்கு கூட அனுமதி மறுக்கப்படுகின்றது. அதனால் தான் நான் இன்றைக்கு இந்த போராட்டத்தை நடத்தினேன். தமிழக மக்களை பாதுகாக்க வேண்டும். குறிப்பாக பெண்களை பாதுகாக்க வேண்டும். சென்னை சம்பவத்தை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. எப்ஐஆர் வெளிவந்தது பற்றி பல்வேறு விதமாக பேசுகிறார்கள். காவல்துறை அனுமதியின்றி எப்ஐஆர் வெளி வருவதற்கான வாய்ப்பே இல்லை. அமைச்சர் சேகர்பாபு எனது சாட்டையடி குறித்து விமர்சனம் செய்துள்ளார். தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்கிறனே். 2026ல் மீண்டும் எனக்கு மக்கள் தோல்வியை கொடுத்தாலும் அதையும் ஏற்றுக்கொள்வேன். ஒன்றை மட்டும் தெளிவாக சொல்கிறேன். பணம் கொடுத்து நான் இவ்வளவு வாக்குகள் பெறவில்லை. லண்டனுக்கு போய் வந்த பிறகு அண்ணாமலைக்கு ஏதோ ஆகிவிட்டது என்று திருமாவளவன் சொல்லி உள்ளார். லண்டன் போய் வந்த பிறகு இன்னும் பக்குவப்பட்டுள்ளேன். முன்பை விட என்னால் வேகமாக பணியாற்ற முடிகின்றது. நிறைய புரிதல் கிடைத்துள்ளது. நேற்று எனது செருப்பை கழற்றிவிட்டு தேவாலயம், குருத்வார், சாய்பாபா கோயில் சென்றேன். இது ஆன்மீக அரசியல் அல்ல. சமுதாய அரசியல் அல்ல. இவ்வாறு கூறினார்.
இந்த நூதன போராட்டம் காரணமாக, அண்ணாமலை வீட்டு முன்பு பா.ஜ தெண்டர்கள் திரண்டிருந்தனர். போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.