திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த விவசாயி சண்முகம் (55) இன்று காலை கோவை மெயின் ரோட்டில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் தனது கணக்கில் இருந்து இரண்டு இலட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு, வங்கி கிளையின் முன்பு நிறுத்தியிருந்த தனது ஸ்கூட்டர் சீட் -ற்கு அடியில் வைத்து பூட்டிவிட்டு அருகில் இருந்த கடைக்கு சென்றுள்ளார்.

மீண்டும் சில நிமிடங்களில் திரும்பி வந்து பார்த்த போது தனது ஸ்ட்டரின் சீட்டுக்கு அடியில் வைத்திருந்த பணம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த சண்முகம் வங்கி கிளையின் சிசிடிவி காட்சிகளை பார்த்த போது அடையாளம் தெரியாத நடந்து வந்த இருவர் மற்றும் இரண்டு பைக்குகளில் வந்த நான்கு பேர் என ஆறுபேர் கொண்ட கும்பல் சண்முகத்தின் ஸ்கூட்டர் சீட்டை ஒருவர் இழுத்து பிடிக்க ஒருவர் பணத்தை லாவகமாக எடுத்து தனது சட்டைக்குள் ஒளித்துக்கொண்டு மற்றொருவருடன் பைக்கில் ஏறி ஆறுபேரும் தப்பிச் சென்றது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து அவிநாசி காவல் நிலையத்தில் சண்முகம் அளித்த புகாரின் பெயரில் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் துணிகர கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் நகரின் மையப்பகுதியில் செயல்படும் வங்கி கிளையின் முன்பு நடந்து துணிகர கொள்ளை சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.