கூட்டணிக்கு அச்சாரமாக தமிழக பாஜக வில் மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல்.
மெகா கூட்டணி அமைக்கப்படும் என அதிமுக வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் சொல்லி வருவதின் உள் அர்த்தம் மெல்ல மெல்ல நடந்தேறி வருவதாக கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள். 2019 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களில் அதிமுக கூட்டணியில் பாஜக இருந்த நிலையில் , அண்ணாமலை என்ற ஒற்றை நபருக்காக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்தது. தனித்தனியே போட்டியிட்ட அதிமுக வும் பாஜக வும் 2024 தேர்தலில் ஒரு இடங்களில் கூட வெல்ல முடியவில்லை. அப்போதில் இருந்தே பாஜக வின் டெல்லி தலைமைக்கு அதிமுக கூட்டணியில் இடம் பெறவே முயற்சித்து வந்தது. அந்த நிலையில் அரசியல் படிப்பிற்காக லண்டன் செல்வதாக அண்ணாமலை கூறியவுடன் அதற்கான அனுமதி வழங்கி , இடைப்பட்ட காலத்திற்கு தமிழக பாஜக வை வழிநடத்த குழு ஒன்றையும் அமைத்தது டெல்லி தலைமை. இந்த நிலையில் மீண்டும் 2026 தேர்தலுக்கு அதிமுக பாஜக கூட்டணி வரும் என்ற வகையில் அமைந்துள்ளது சமீபத்திய அரசியல் நகர்வுகள்.
லண்டன் சென்று வந்த பிறகு அண்ணாமலையின் செயல்பாட்டில் பெரிதும் மாற்றம் இருப்பதை பாஜக நிர்வாகிகளே கூறி வருகின்றனர். கடந்த 3 மாதங்களில் ஒரு முறை கூட அதிமுக குறித்து எந்த பரபரப்பு கருத்துகளையும் அண்ணாமலை கூறவில்லை. மாறாக , அதிமுக வும் சமீபத்தில் நடந்த செயற்குழு பொதுக்குழுவில் , மாநிலத்தை ஆளும் திமுக அரசிற்கு கண்டனம் என்றும் , மத்திய பாஜக அரசுக்கு வலியுறுத்தல் என்றூம் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.
அதன் பிறகு தான் அண்ணாமலையின் சொந்த மச்சான் நடத்தி வரும் தொழிலின் பார்ட்டனர் வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தியது வருமான வரித்துறை. அந்த ரெய்டு நடந்த சில நாட்களுக்குள்ளாகவே இரவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்று சந்தித்தார் அண்ணாமலை. அந்த சந்திப்பின் போதே ரெய்டு குறித்து பேசியதோடு மட்டும் அல்லாமல் , மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி வரும் என்ற பேச்சுகளும் இடம் பெற்றதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தான் , தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகிய இருவரும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். கூட்டணி விவகாரங்கள் குறித்து பேசவும் , ரெய்டு குறித்த நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தியும் இருவரும் டெல்லியில் முகாமிட்டுள்ளதாகவும் , கூட்டணி முடிவானால் தமிழக பாஜக வில் விரைவில் மாற்றம் இருக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.