திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு செயல்படுத்தப்பட்டுள்ள சில நலத்திட்டங்களை பட்டியலிட்டு

ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் அறிக்கை

இந்தியாவில் சமூகநீதிக்கான போராட்ட வரலாற்றில் வைக்கம் போராட்டம் முன்னோடிப் போராட்டம்!

வைக்கம் போராட்டத்தைப் பற்றி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் 1924-1925ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த வைக்கம் போராட்டம் என்பது, இந்தியாவின் சமூக சீர்திருத்த வரலாற்றில் முக்கிய இடம்பெற்றது; இந்தியாவின் கோயில் நுழைவுப் போராட்டங்கள் அனைத்திற்கும் முன்னோடியாகத் திகழ்ந்தது; ஒடுக்கப்பட்டவர்கள் சமத்துவ உரிமையைப் பெறுவதில் முதற்படியாக அமைந்தது என்று சொன்னால், அது மிகையல்ல” என 30-03-2023 அன்று சட்டமன்றத்தில் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா அறிவிப்பின்போது கூறினார்.

இந்த நூற்றாண்டு விழா அறிவிப்பின் போது, “கேரள மாநிலம் வைக்கத்தில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தை நவீனமுறையில் மறுசீரமைக்கவும், பெரியார் தொடர்பான நினைவுப் பொருட்கள் கூடுதலாக இடம் பெறுவதற்கும் 8 கோடியே 14 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என அறிவித்தார். இன்று கேரள மாநிலம் வைக்கத்தில் தமிழ்நாடு அரசால் புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகத்தையும் பெரியார் நூலகத்தையும் 12.12.2024 அன்று திறந்து வைத்துள்ளார்கள்.

தந்தை பெரியாரால் கொள்கை உரமூட்டப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்கும் காலமெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களுக்கு இந்த சமூகம் விதித்திருந்த சமூகத்தடைகளை நீக்குவதற்கான முயற்சிகளை முதற்கடைமையாக கொண்டு செயலாற்றி வருகிறது. கோவில் தெருக்களில் நடக்கமுடியாது என ஆதிக்கவாதிகளால் ஒடுக்கப்பட்டவர்களை கோவிலின் கருவறைக்குள்ளாகவே அழைத்துச் செல்வதற்காகச் சட்டமியற்றியது திராவிட மாடல் அரசு.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூகப் பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்காக திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் சிலவற்றை குறிப்பிடுவது மிகப் பொருத்தமுடையதாகும். இந்த அரசு அமைந்தவுடன் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் அமைக்கப்பட்டது. ஓய்வுப் பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் செயல்படும் இவ்வாணையத்தின்

மூலம் தற்போது வரை 3695 மனுக்கள் பெறப்பட்டு 2945 மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுக் காலத்தில் ஆதிதிராவிடர் நலத் துறையின் சார்பில் ரூ.46.65 கோடிச் செலவில், 2,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்புத் திட்டத்தின் (Tatkal Scheme) கீழ் மின் இணைப்புப் பெற 90 சதவிகிதம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

சாதி வேறுபாடுகளற்ற மயானங்களை பயன்பாட்டில் கொண்டிருக்கும் முன்மாதிரி சிற்றூர்களுக்கு ஊக்கத் தொகையாக, வளர்ச்சிப் பணிகளைச் செயல்படுத்த அரசு சார்பில் தலா ரூ.10 இலட்சம் வீதம் வழங்கப்படுகிறது.

ரூ.10 கோடிச் செலவில், 200 நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளர்கள் நிலம் வாங்க மானியம் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.45 கோடி மதிப்பீட்டில் எம்.சி. ராஜா விடுதி வளாகத்திற்குள் சுமார் 1,00,000 சதுர அடி பரப்பளவில் 10 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கூடிய மாணவர் விடுதியும் ரூ.28 கோடி மதிப்பீட்டில் 4 ஆதிதிராவிடர் மாணாக்கர் விடுதிகளுக்கு புதிய விடுதிக் கட்டடங்கள், ரூ.100 கோடி மதிப்பீட்டில் மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரியில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நவீன வசதிகளுடன் நான்கு புதிய விடுதிக் கட்டடங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதுபோல எண்ணற்றத் திட்டங்களை அரசு செயல்படுத்திவருகிறது.

அரசின் சீரிய முயற்சிகளால் ஆண்டுதோறும் ஆதிதிராவிடர் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது. அரசின் அனைத்து துறைகளிலும் சமூகநீதிக் கோட்பாட்டை வலியுறுத்தி செயல்படும் திராவிட மாடல் அரசின் கீழ் ஆதி திராவிடர் நலத்துறை மேலும் பல சாதனைகளைப் படைக்கும். சமூகநீதி இலட்சியப் பயணத்தில் இந்தியாவிலேயே முன்னோடியாக செயல்படும் முதலமைச்சரின் தலைமையின் கீழ் சமத்துவ சமுதாயம் நோக்கி பயணப்படும்.