இராஜபாளையம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்ற நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் மார்கழி மாதம் பிறப்பதை முன்னிட்டு இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்ற நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் மிக முக்கியமானதாகும். இங்கு மகாலட்சுமியின் அம்சமாகிய ஸ்ரீ ஆண்டாள் மானிட பெண்ணாக அவதரித்து பாமாலை பாடி பின் பூமாலை சூட்டி ஸ்ரீ ரங்கநாதரை அடைந்தார். ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் முழுவதும் ஸ்ரீ ஆண்டாள் கோவில் மட்டுமல்லாது ஸ்ரீவில்லிபுத்தூரே விழாக்கோலமாக இருக்கும்.
இந்நிலையில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு மாதப்பிற்பிற்கு முதல் நாளான இன்று ஹைதராபாத் த்ரீ தண்டி ராமானுஜ ஜீயர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஜீயர் மற்றும் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் கலந்து கொண்ட நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டிய நிகழ்ச்சியில் இளையராஜா இசையமைத்து பாடிய திவ்ய பாசுரம் இசைக்கப்பட்டு நடன கலைஞர்கள் நாட்டியமாடினர்.
முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலுக்கு வந்த இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீ ஆண்டாள் மற்றும் ஸ்ரீ வடபத்ர சயனர் திருக்கோவிலில் தரிசனம் செய்த இளையராஜா நடைபெற்ற நாட்டிய நிகழ்ச்சி முழுவதிலும் கலந்து கொண்டார்.
ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் தரிசனம் செய்யும் போது இசையமைப்பாளர் இளையராஜா பட்டாச்சாரியார்களுடன் அர்த்தமண்டபத்திற்குள் சென்றுவிட்டார் தொடர்ந்து அதை அவரிடம் தெரிவித்தவுடன் அங்கிருந்து வெளியே வந்து நின்று சாமி தரிசனம் செய்து திருக்கோவில் மரியாதையை ஏற்றுக்கொண்டார்