திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து பழங்கரை இந்திரா காலனி பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் மருதாசலமூர்த்தி. திருப்பூரில் சிறிய அளவில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மனைவி சுமதி, வீட்டின் அருகில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் இளம் சிறார் (மகா அர்ஜுனன்) (17) மகனும், திருமுருகன்பூண்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ மூன்றாம் ஆண்டு படித்து வரும் அவந்திகா (19) என்ற மகளும் உள்ளனர்.
இதே போல, அவிநாசி கங்கவர் வீதி பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ரமேஷ் என்பவருக்கு இரு மகள்கள் உள்ளனர். அதில் இளைய மகள் மோனிகா (19).
அவந்திகாவும் மோனிகாவும் ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்து வருகின்றனர். மேலும், இவர்கள் இருவரும் கல்லூரி நேரம் போக மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை அவிநாசியை அடுத்து திருமுருகன்பூண்டி அருகே உள்ள தனியார் டிபார்ட்மென்டல் ஸ்டோரில் பகுதி நேர வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகளாக பழகி வருகின்றனர்.
இந்நிலையில், வழக்கம் போல அவந்திகாவின் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய அவந்திகாவின் இளம் சிறார் தம்பி வீட்டில் நுழைந்து பார்த்த போது ஹாலில் அவந்திகா மற்றும் மோனிகா இருவரும் அருகருகே துப்பட்டாவில் தூக்கு மாட்டியபடி இறந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார்.
இதையடுத்து அக்கம் பக்கம் இருந்தவர்கள் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவிநாசி போலீசார், இருவரது உடலையும் மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கல்லூரி தோழிகள் இருவரும் ஒரே சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரு இளம் பெண்களின் தற்கொலைக்கான காரணம் குறித்து அவிநாசி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.