திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்த அணைப்பதி பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (54).விவசாயி. மேலும் இவர் எலக்ட்ரிஷன் ஆக வேலை பார்த்து வருகிறார்.இவர் நேற்று தனது வீட்டில் இருந்து கொண்டிருந்தபோது காரில் வந்த கும்பல் ஒன்று தங்களை போலீஸ் என்றும், விசாரிப்பதற்காக காவல் நிலையம் அழைத்துச் செல்ல வந்திருப்பதாகவும் கூறியுள்ளனர். அந்த இடத்தில் இரு தரப்புக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென ரங்கசாமியை வலுக்கட்டாயமாக தூக்கி காரில் கடத்தி சென்றது அந்தக் கும்பல்.
இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் மாவட்டம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
போலீசார் தேடுவதை அறிந்து கொண்ட அந்த கும்பல் ரங்கசாமியை பழனியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் அடைத்து விட்டு அவர்களுக்குள் ஏதோ பேசி முடிவெடுத்து விட்டு மீண்டும் ரங்கசாமியை கோவில் வழி பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து பஸ்சை பிடித்து வீட்டிற்கு வந்த ரங்கசாமி, பெருமாநல்லூர் போலீசில் தன்னை கடத்தி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் பெருமாநல்லூர் போலீசார் பெருமாநல்லூர்-வாவிபாளையம் ரோட்டில் சட்டக் கல்லூரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது போலீசாரை பார்த்ததும் காரை திருப்பிக் கொண்டு சென்ற காரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.அப்போது ரங்கசாமியை கடத்தியதும் இவர்கள்தான் எனவும், காரில் இருந்தது திருப்பூரை சேர்ந்த சண்முகம் மற்றும் அவரது நண்பர்கள் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து சண்முகத்தின் நண்பர்களான ஈஸ்வரன், ஸ்டாலின், சதாசிவம், சூரிய பிரபாகரன் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.
கைதானவர்களிடம் விசாரணை நடத்திய போது விவசாயியான ரங்கசாமி தனக்கு சொந்தமான 80 சென்ட் இடத்தை விற்பதற்கு முடிவு செய்துள்ளார். அதனை வாங்குவதற்கு முன் வந்த சண்முகம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரூ.6 லட்சம் முன்பணமாக கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்டு இடத்தை கிரையம் எழுதிக் கொடுக்காமல் காலம் கடத்தி வந்ததோடு தற்போது நிலத்தின் மதிப்பு அதிகமாகி விட்டது எனவே கூடுதல் விலை வேண்டுமென கேட்டுள்ளார்.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து அவரை கடத்தி சென்று மிரட்டி எழுதி வாங்க முடிவு செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து ரங்கசாமியின் புகார் அடிப்படையில் கடத்தியவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.