தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் சாலை அருகே தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் காத்தாடி விட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி புகார் மனு

கோவை மலுமிச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (35). இவர் சென்னையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். கார்த்திக் தற்போது கோவையில் உள்ள வீட்டில் இருந்தவாறு பணியாற்றி வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை கல்லூரியில் இருந்து பணி முடிந்து வீடு திரும்பிய தனது மனைவியை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு மலுமிச்சம்பட்டி நோக்கி சென்றார். அப்போது உக்கடம் மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றார்., ஆத்துப்பாலம் அருகே வந்தபோது திடீரென ஒரு காத்தாடியின் மாஞ்சா நூல் ஒன்று குறுக்கே வந்தது. அப்போது கார்த்திக்கின் கழுத்தை அறுத்த நிலையில், அவர் கைகளால் நூலை பிடித்துக் கொண்டு வண்டியை நிறுத்தினார். இதில் கார்த்திக்கின் இடது கை விரல்களும் அறுபட்டது. மேலும் இரத்தம் அதிக அளவில் வெளியேறிய நிலையில், அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் கார்த்திக்கை மீட்டு சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி செய்யப்பட்டதோடு, கைவிரல்களில் ஐந்து தையல்கள் போடப்பட்டது. இந்த நிலையில் பொதுமக்கள் அதிகமாக செல்லக்கூடிய சாலைகள், மேம்பாலங்களில் மாஞ்சா நூல் பட்டம் விடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி கார்த்திக் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தார். இது குறித்து கூறிய அவர் இருசக்கர வாகனத்தில் தனது மனைவியுடன் வந்தபோது திடீரென மாஞ்சா நூல் வந்தது, சுதாரித்துக் கொண்டதால் உயிர் தப்பினேன். இருப்பினும் எனது குழந்தையை முன்னாள் அமர வைத்து அழைத்து வந்திருந்தால், பெரிய விபரீதம் ஏற்பட்டிருக்கும் எனவே இவ்வாறு ஆபத்தை விளைவிக்கக் கூடிய வகையில் மாஞ்சா நூல் காத்தாடிகள் விட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கோவையில் இரத்த பாலக்காடு, பொள்ளாச்சி செல்லும் பிரதான சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வாகனங்களில் செல்கின்றனர். பள்ளி கல்லூரிகளுக்கு மாணவர்களை பெற்றோர்கள் இருசக்கர வாகனங்களில் அழைத்துச் செல்லும் பிரதான சாலையாகவும் உள்ளது. அன்மையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய மேம்பாலத்தையும் முதல்வர் திறந்து வைத்தார். இந்த சாலை குறுக்கே உயிரையே காவு வாங்கும் மாஞ்சா நூல் காத்தாடி விடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.