சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே விஷ வண்டு கடித்து 9 ஆம் வகுப்பு மாணவன் உட்பட 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இளையான்குடியை அடுத்துள்ள சோதுகுடி கிராமத்தை சேர்ந்தவர் 14 வயதான கேசவரூபன். இவர் அங்குள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் வழக்கம்போல் தனது சைக்கிளில் பள்ளிக்கு செல்லும்போது சாலையின் ஓரமிருந்த மரத்தில் இருந்து கிளம்பிய விஷ வண்டு கடித்து காயமடைந்தனர். இதனை கண்ட அவ்வழியாக சென்ற சுந்தர்ராஜன் என்பவர் மாணவனை காப்பாற்ற முயன்றுள்ளார். இதில் அவரையும் வண்டு கடித்துள்ளது. மேலும் அவ்வழியாக சென்ற ஜேம்ஸ், கண்ணையா ஆகியோர் உட்பட 6 பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் அனைவரும் இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கிருந்து மாணவன் உட்பட 4 பேர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வண்டு கடித்து மாணவன் உட்பட 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
