
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது எம். குண்ணத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் கடந்த சில நாட்களாக வீடுகளில் இருக்கும் பித்தளை பொருட்கள் திருடு போனது தொடர்பாக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வந்த நிலையில், இன்று காலை சந்தேகத்திற்கு இடமாக சுற்றி வந்த ஒரு வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து விசாரித்ததில் அந்த வாலிபர் கிளியூர் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (25) என தெரியவந்தது.
இவர் வீடுகளில் பித்தளை பொருட்களை திருடி உளுந்தூர்பேட்டையில் உள்ள இரும்பு கடையில் விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் இந்த வாலிபரை பிடிக்கும் போது கையை கடித்ததால் இந்த பகுதியில் உள்ள ஒரு மின் கம்பத்தில் கட்டி வைத்து திருநாவலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து பின்னர் போலீசார் வந்தவுடன் ஒப்படைத்தனர். பிடிபட்ட பாலகிருஷ்ணன் வேறு ஏதாவது திருட்டு வழக்கில் தொடர்பு உள்ளதா என திருநாவலூர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.