சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நடைபெற்ற மீன் பிடித்திருவிழாவில் மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் சென்ற கிராம மக்கள்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கத்தில் உள்ள சிறுமருதூர் கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.

கோடை காலம் துவங்கி விட்ட நிலையில் கண்மாயில் உள்ள தண்ணீர் வற்ற தொடங்கியதை அடுத்து கிராமத்தார்கள் மீன்பிடித் திருவிழா நடத்த முடிவு செய்தனர். ஊத்தாகூடை, பரி, வலை, கச்சா , உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை கொண்டு வந்து மீன்களை பிடிக்க காத்திருந்தனர்.

ஆனால் கண்மாய் முழுவதும் தாமரை படர்ந்திருந்ததால் ஒரு சிலரை தவிர, பலருக்கும் மீன்பிடி உபகரணங்களில் மீன்கள் சிக்கவில்லை. இந்நிலையில் கிராமத்தினர் கண்மாய்க்குள் இறங்கி, கைகளால் தேடி தேடி மீன்களை பிடித்தனர்,

எதிர்பார்த்த அளவிற்கு மீன்கள் கிடைக்கவில்லை என்றாலும் குரவை மீன்கள் கிடைத்தன. ஏற்கனவே கண்மாய் முழுவதும் தாமரைகள் படர்ந்து கிடப்பதால் வெளியில் இருந்து வந்த கிராம மக்கள், மீன்பிடியாளர்கள் மிகுந்த ஏமாற்றத்தை சந்தித்தனர். பலரும் மீன் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.