அரசு பள்ளி மாணவர்களை பெற்றோர் அனுமதி இன்றி ஜெப கூடத்திற்கு அழைத்துச் சென்ற விவகாரம்
உரிய நடவடிக்கை எடுக்க கோரி இந்து அமைப்புகள் காவல் நிலையத்தை முற்றுகை
வழக்கு பதிவு செய்ய சட்டப்பிரிவுகள் இல்லை என போலீசார் விளக்கம்
பொள்ளாச்சியை அடுத்த ஊஞ்சவேலம்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களை நேற்று மாற்று சான்றிதழ் பெறுவதற்காக பள்ளி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.மேலும் 11 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான வளர் இளம் குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சி பள்ளியில் நடைபெறும் என கூறப்பட்டதாக தெரிகிறது.இதனை அடுத்து பள்ளிக்கு மாணவர்களை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந் நிலையில் அப்பள்ளியில் பயிலும் 14 வயது சிறுமியின் தாய் ஒருவர் தனது குழந்தையை மீண்டும் அழைத்துச் செல்ல பள்ளிக்கு வந்தபோது, பள்ளியில் சிறுமி உட்பட 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த தாயார் விசாரித்த நிலையில், சின்னாம் பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மத போதகர் செல்வராஜ் என்பவர் சட்டவிரோதமாக ஜெப கூடத்தை நடத்தியுள்ளதாகவும்,அங்கு மாணவர்களை செவிலியர் பவானி பிரார்த்தனைக்காக அழைத்துச் சென்றதாகவும் கூறப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற சிறுமியின் தாயார் தனது குழந்தையை அழைத்து செல்ல முற்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான வாக்குவாதம் முற்றி சிறுமியின் தாயார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.தொடர்ந்து நீண்ட வாக்குவாதத்திற்கு பின்பு சிறுமியின் தாயார் சிறுமியை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார், பள்ளிக்கு கல்வி பயில சென்ற குழந்தையை பெற்றோர் அனுமதியின்றி கட்டாயம் மதமாற்றம் செய்வதற்காக வீட்டில் செயல்படும் மாற்று மத கூடத்திற்கு அழைத்துச் சென்ற செவிலியர் பவானி, வாகன ஓட்டுநர் மற்றும் மதபோதகர் செல்வராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கொடுத்த புகாரின் அடிப்படையில் கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மூவரையும் கைது செய்யவில்லை எனவும் வழக்கு பதிவு செய்யவில்லை எனவும் கூறி இந்து அமைப்பினர் இன்று கிழக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில்,
கட்டாய மதமாற்றம் குறித்து வழக்கு பதிவு செய்ய உரிய சட்டப்பிரிவுகள் இல்லை எனவும், மேலும் இதுகுறித்து சட்ட வல்லுனர் குழு கூட்டமைப்புடன் ஆலோசித்த பின்பு தான் வழக்கு பதிவு செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் பொள்ளாச்சியில் பரபரப்பு நிலை வருகிறது