சங்கராபுரம் அருகே தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இருவர் கைது ; ஏழு லட்சம் மதிப்பிலான ஐந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு நாட்டுத்துப்பாக்கி உள்ளிட்டவை பறிமுதல்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தில் சட்டத்திற்கு புறம்பாக நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக சங்கராபுரம் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சங்கராபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தனசேகர் தலைமையிலான போலீசார் விரியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஜான் கென்னடி என்கின்ற ராஜா மற்றும் அந்தோணிசாமி ஆகிய இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததை தொடர்ந்து அவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் சட்டத்திற்கு புறம்பாக 2 நாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்ததும்,மேலும் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இரு சக்கர வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் இருந்து இரண்டு நாட்டு துப்பாக்கி மற்றும் விலை உயர்ந்த ஏழு லட்சம் மதிப்பிலான ஐந்து இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.