மதுரை கே.கே நகர் மழையர் பள்ளியின் தண்ணீர் தொட்டியில் 4 வயது பெண் குழந்தை பலி:பள்ளிக்கு சீல் வைத்து பள்ளியின் தாளாளர் கைது:7 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை கே.கே.நகர் பகுதியில் (Sri Kindar Garden ) “ஸ்ரீ இளம் மழலையர்”, பள்ளி 15 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இதில் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயில்கின்றனர். இங்கு கோடை கால சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. இதில் “Daycare”செண்டராகவும் செயல்பட்டு வந்தது, வேலைக்குச் செல்லும் பெற்றோர் தங்களின் பிள்ளைகளை விடும் பள்ளியாகவும் இருந்து வந்துள்ளது.
இதில் மதுரை உத்தங்குடி பகுதியைச் சேர்ந்த அமுதன்-ஆனந்தி தம்பதியின் 4-வயது குழந்தை ஆருத்ரா பயின்று வந்துள்ளார். இன்று வழக்கம்போல் குழந்தை ஆருத்ரா பள்ளிக்கு வந்திருக்கிறார்.
காலை பள்ளியின் பின்புறம் சென்ற குழந்தை திறந்து கிடந்த 12 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளார், அரை மணி நேரத்திற்கு பிறகு ஆசிரியர்கள் குழந்தையை தேடிச் சென்றுள்ளனர், ஆருத்ரா தண்ணீர் தொட்டியில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து தீயணைப்புத்துறை, போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
பள்ளியைச் சேர்ந்தவர்கள் குழந்தை ஆருத்ராவை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குக்(Apollo Child Care Hospital) கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்ததை உறுதி செய்தனர். பள்ளியின் தண்ணீர் தொட்டியில் குழந்தை விழுந்து இறந்த சம்பவம் குறித்த தகவல் வெளியாகியதைத் தொடர்ந்து, காவல்துறை துணை ஆணையர் அனிதா, வருவாய் கோட்டாச்சியர் ஷாலினி, மாவட்ட கல்வி அலுவலர் ரேணுகா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பள்ளி முழுவதிலும் ஆய்வு நடத்தினர்.
அதிகாரிகள் பள்ளியில் உள்ள அனைத்து குழந்தைகளையும் அனுப்பி வைத்துவிட்டு பள்ளிக்கு உள்ளேயும், வெளியிலும் சீல் வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் திவ்யா அண்ணாநகர் போலீசாரால் கைது செய்யப்பட்டர், மேலும், இது தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் 6 பேர், உதவியாளர் ஒருவர் என 7 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை ஆணையர் அனிதா கூறுகையில்,
“குழந்தையை காலை பள்ளியில் விட்டு இருக்கிறார்கள், கவனக் குறைவு காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது, இதை மாவட்ட கல்வி அலுவலர் உறுதி செய்தனர், இது தொடர்பாக பள்ளி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார், மற்றவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது”, எனக் கூறினார்.
மாவட்ட கல்வி அலுவலர் ரேணுகா கூறுகையில்,
இந்த மழலையர் பள்ளி கவனக் குறையாக செயல்பட்டது கண்டறியப்பட்டது. எனவே பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது, மதுரை மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்படும் மழலையர் பள்ளிகள் கண்டறியப்பட்டால், அந்த பள்ளிகளுக்கு நேட்டீஸ் வழங்கப்படும்”, என்றார்.
குழந்தையின் தந்தை அமுதன் கூறுகையில்,
“பள்ளி நிர்வாகம் எனக்கு 10:50 மணிக்கு எனது குழந்தை தொடர்பான தகவலை கூறுனார்கள். நேரடியாக இங்கே மருத்துவமனைக்கு, குழந்தை நீண்ட நேரமாக தண்ணீர் தொட்டியில் கிடந்துள்ளார். யாரும் அதனை கவனிக்கவில்லை, இது தொடர்பாக பள்ளி நிர்வாகிகளை சந்திக்க முடியவில்லை, எனக்கு என்ன நடந்து என தெரியவில்லை, எனது மகள் நல்ல குழந்தை, இனி என்ன பேசினாலும் வரப் போவதில்லை என வருத்தத்துடன் கூறினார்.
“மதுரையில் 200-க்கும் மேற்பட்ட மழலையர் பள்ளிகள் அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகிறது. இது தொடர்பான தகவலை மாவட்ட கல்வித்துறையிடம் வழங்கி இருக்கிறோம் இதன் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்”, என மதுரை மாவட்ட மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் சங்கத் தலைவர் கதிவரன் கூறினார்