கோவை மாநகரில் கடைவீதி, ராமநாதபுரம், சுந்தராபுரம், ரேஸ்கோர்ஸ், சாய்பாபா காலனி, ஆர்.எஸ் புரம் ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பேருந்து பெண் பயணிகளை குறி வைத்து நகை திருட்டு நடந்து வந்தது. மேலும் கோவில் விழா உள்ளிட்ட மக்கள் கூட்டம் அதிகம் கூடும் இடங்களிலும் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்து வருவதாக தொடந்து புகார்கள் வந்தது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 30 க்கும் மேற்பட்ட புகார்கள் வந்ததால் நகை பறிப்பில் ஈடுபடும் நபர்களை விரைந்து பிடிக்க மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் உதவி ஆணையர் முருகேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கோவை மாநகரில் உள்ள 100 க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி கேமிராக்களை ஆய்வு செய்து, 70 க்கும் மேற்பட்ட பேருந்துகளில் பயணித்து கண்காணித்து வந்தனர். அதில் கைப்பற்றிய அடையாளங்களை வைத்து போலீசார் நகைப் பறிப்பில் ஈடுபட்டு வந்தது 2 பெண்கள் மட்டும் தான் என்பதை உறுதி செய்தனர். இந்த நிலையில் டவுன் ஹால் பகுதியில் போலீசார் சாதாரண உடையில் கண்காணித்து கொண்டு இருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக 2 பெண்கள் இளநீர் குடித்து கொண்டு ஒரு பெண்ணின் நகையை பறிக்க முயற்சி செய்தனர். இதனை பார்த்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். விசாரணையில் பிடிபட்ட பெண்கள் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முருகேஷ்வரி (36) மற்றும் ராதா (35) ஆகியோர் என்பதும், இருவரும் சகோதரிகள் என்பதும் தெரியவந்தது. மேலும் தொடர் விசாரணையில் ராதாவின் கணவர் பிரிந்து சென்றதால், முருகேஷ்வரியின் கணவருடனே ராதாவும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். ஒரே குடும்பமான இருவரும் பல்வேறு இடங்களில் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்து உள்ளனர். அதிகமாக கேரளாவில் நகைப் பறிப்பில் ஈடுபட்டு உள்ளனர். கேரளாவிலும் அவர்கள் மீது 15 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. கோவைக்கு வரும் இவர்கள் ஒரு மாதம் கோயில், அதிகம் கூட்டம் கூடும் இடங்களில் நோட்டமிட்டு வயதானவர்களிடம் நகையை பறித்து வந்து உள்ளனர். ஒரு மாதம் கழித்து இடத்தை மாற்றி வந்தனர். இதனால் ஒரு வருடமாக போலீசார் பிடியில் சிக்காமல் இருந்தனர். அதே போல மருதமலை கோயில் பகுதியில் இரவு நேரத்தில் பக்தர்களுடன் சேர்ந்து தூங்குவது போல் நடித்து நகை பறித்து வந்து உள்ளனர். பின்னர் பேருந்துகளில், கூட்டம் கூடும் இடங்களில் அவர்கள் கைவரிசை காட்டி வந்துள்ளனர். தொடர்ந்து அவர்களை பிடிக்க கடந்த 15 நாட்களில் அதிகாலை முதல் இரவு வரை 80 க்கும் மேற்பட்ட பேருந்துகளில் பயணித்து கண்காணித்து வந்த நிலையில் போலீசார் பிடித்துள்ளனர். மேலும்
அவர்கள் நகை பறிப்பில் கிடைக்கும் பணத்தை வைத்து வீடு, நிலம் வாங்கி ஆடம்பரமாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. மேலும் பிடிபட்ட அவர்களிடம் இருந்து 20 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். இதையடுத்து பிடிபட்ட இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.