பொன்னேரியில் அடாத மழையிலும் விடாது பணியாற்றிய போக்குவரத்து காவலர். கொட்டும் மழையிலும் போக்குவரத்தை ஒழுங்கு படுத்திய காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் சுமார் 1 மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். குறிப்பாக தேரடி ரயில்வே மேம்பாலத்தின் கீழ் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

அரசு பேருந்து ஒன்றும் தண்ணீரில் தேங்கி வெளியேற முடியாமல் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அப்புறப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தேரடி சந்திப்பில் பொன்னேரி – பழவேற்காடு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் போக்குவரத்து காவலர் ஒருவர் வாகனங்களை ஒழுங்கு படுத்தியது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

வாகனங்கள் தாறுமாறாக நின்றிருந்த நிலையில் போக்குவரத்து காவலர் இங்கும் அங்கும் ஓடி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்தபடியே பணியில் ஈடுபட்ட காவலருக்கு ஒருவர் ஓடிச் சென்று குடையை கொடுத்து பின்னர் குடை பிடித்தபடி காவலர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டார்.