
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் இன்று காலை உங்களை தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதனைத் தொடர்ந்து ஆதனூர் மற்றும் பாச்சாப்பாளையம் கிராமங்களில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அங்கு நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை பார்வையிட்டார் மற்றும் தூய்மை பணியாளர்களின் எண்ணிக்கை, அவர்களின் தினசரி பணிகள் குறித்து கேட்டறிந்து கிராம ஊராட்சிகளில் சிறப்பாக தூய்மை பணிகளை மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்.
மேட்டுப்பாச்சாபாளையம் கிராமத்தில் குப்பை தரம் பிரிக்கும் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்குமாறு பொதுமக்களிடம் அறிவுரை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து குடிநீர் வசதி, வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை பணிகள் நடைபெற்று உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அனைத்து துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.