கோவை

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தகிரி. இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் முரளிதரன் என்பவர் பங்குதாரராக இருந்து வருகிறார் .கோவையைச் சேர்ந்த வக்கீல் ரவிக்குமார் என்பவர் சட்ட ஆலோசகராக பணி புரிந்து வந்தார். சட்ட ஆலோசகராக பணி புரிந்து வந்த ரவிக்குமார் நில ஆவணங்கள் குறித்த சரிபார்ப்பு பணிகளில் சரிவர செய்யவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன .

இதனால் அவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து நிறுத்தி விட்டனர். இதைத் தொடர்ந்து ரவிக்குமார் அடிக்கடி குடிபோதையில் போன் மூலம் தொடர்பு கொண்டு ஆபாச வார்த்தைகள் பேசி வந்து உள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரவிக்குமார் குடிபோதையில் தீர்த்தகிரியின் வீட்டிற்கு வந்த கதவை எட்டி உதைத்து வீட்டிற்குள் செல்ல முயன்று உள்ளார். அப்போது தீர்த்தகிரி மனைவி குமாரி வெளியே வந்து உள்ளார். அப்போது ரவிக்குமார் ரியல் எஸ்டேட் உரிமையாளர் குறித்து தவறான தகவல்களை கூறி உள்ளார். பின்னர் கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தீர்த்தகிரியின் வீட்டிற்கு குடிபோதையில் ரவிக்குமார் வந்து உள்ளார். வாசலில் நின்று தகாத வார்த்தைகள் பேசியதை தீர்த்த கிரியின் மனைவி குமாரி வீட்டில் ஜன்னல் வழியாக பார்த்து உள்ளார்.

அப்போது ரவிக்குமார் வீட்டை விட்டு வெளியே வர விட்டால் பெட்ரோல் குண்டு வீசி அனைவரையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டி உள்ளார். இது குறித்து தீர்த்தகிரியின் மனைவி குமாரி சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் கோவையை கணபதியை சேர்ந்த வக்கீல் ரவிக்குமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தீர்த்த கிரியின் வீட்டிற்கு குடிபோதையில் சென்று பெட்ரோல் குண்டு வீசி விடுவேன் என்று வக்கீல் ரவிக்குமார் மிரட்டும் சி.சி.டி.வி காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். வேலையை விட்டு நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த வக்கீல் ஒருவர் ரியல் எஸ்டேட் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி விடுவேன் என்று மிரட்டல் விடுத்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.