நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூட்டப்புளி கடற்கரை மீனவ கிராமத்தில் கடலில் ஏற்படும் சீற்றத்தால் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மீனவர்கள் தூண்டில் வளைவு அமைக்க கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் கூட்டப்புளி கடற்கரையில் 48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்கும் பணியை சில மாதங்களுக்கு முன் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாகி வருகிறது. எனவே தூண்டில் வளைவு அமைக்கும் பணியை துரிதப்படுத்தி விரைந்து பணியினை முடிக்க வேண்டும் என வலியுறுத்தி கூட்டப்புளி கடற்கரை கிராம மீனவர்கள் இன்று தங்களது வீடுகளில் கருப்பு கொடி கட்டியும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கடல் அரிப்பு ஏற்படுவதை தடுக்கும் விதமாக பொதுமக்களே ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு மண் மூட்டைகளை அடுக்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.