கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை காமராஜர் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று காலை அரசு பேருந்து ஒன்று நாகர்கோவில் நோக்கி புறப்பட்டது. பேருந்தில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பேருந்தில் முன்னாள் ஆத்திவிளை ஊராட்சி தலைவி அகஸ்டினாள் என்பவரும் பயணம் செய்தார்.
திங்கள் நகர் ரவுண்டானா தாண்டி எஸ்பிஐ வங்கி முன்பு பஸ் சென்ற போது அருகில் நின்ற இளம் பெண் ஒருவர் அகஸ்டினாள் கைப்பையை திறந்து நைசாக பணத்தை திருடினார்.
இதைப் பார்த்த அருகில் நின்ற சக பெண் பயணிகள் அவரை கையும் களவுமாக பிடித்தனர். அப்போது அவருடன் வந்த 2 இளம் பெண்கள் திருட்டுக்கு உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. 3 பெண்களையும் சக பயணிகள் பிடித்து இரணியல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு நடந்த விசாரணையில் அகஸ்டினாள் பையில் இருந்து திருடிய ரூ. 5 ஆயிரத்து500 ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஓசூர் பகுதியை சேர்ந்த சங்கீதா, மல்லிகா, லட்சுமி என்பது தெரிய வந்தது.
இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் பதி வாகி இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.