திருப்பூர் பல்லடம் சாலை எல் ஆர் ஜி அரசு மகளிர் கலை கல்லூரியில் விளையாட்டு விழா இன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் , கலந்து கொண்டிருந்தார்.

விளையாட்டு விழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் கல்லூரி வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். சிறப்பு விருந்தினர்கள் கல்லூரி கொடி மற்றும் விளையாட்டு கொடியினை ஏற்றி வைத்தனர். இதனை தொடர்ந்து கல்லூரி மாணவிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாணவிகள் மத்தியில் பேசிய மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் , விளையாட்டு உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடியது மட்டுமல்லாது அனைவரையும் ஒன்றிணைக்க கூடியது. திருப்பூர் மாவட்டத்தில் மிகப் பிரசித்தி பெற்ற எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலை கல்லூரியில் படிக்கும் மாணவிகள் தங்களது கல்லூரியை முடித்து அனைத்து துறைகளிலும் விளையாட்டு , விண்வெளி ஆராய்ச்சி , அறிவியல் , பொருளாதாரம் , அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சாதனை படைக்க கூடியவர்களாக வர வேண்டும் என வாழ்த்தினார்.

தொடர்ந்து பல்வேறு விளையாட்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசினை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.கல்லூரியில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட சுழற் கோப்பையை அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி அதிக வெற்றி பெற்ற ப்ளூ ஹவுஸ் அணிக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.