மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருநாங்கூரில் 108 திவ்ய தேசங்களும் ஒன்றான வண்புருஷோத்தமன் கோவில் அமைந்துள்ளது. திருமங்கை ஆழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட இந்த ஸ்தலத்தில் வியாக்ரபாதர் மகன் உபமணியும் தாய்ப்பால் நினைத்து அழ பெருமாள் திருப்பாற்கடலை உண்டு பண்ணி பாலமுது ஊட்டியதாக ஐதீகம். இங்கு வந்து பெருமாளை தரிசிப்பவர்களுக்கு பசிப்பிணி நீங்கும் என்று கூறப்படுகிறது.
இத்தகைய சிறப்பு மிக்க வண்புருஷோத்தமன் கோவிலில் பிரம்மோற்சவம் கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது தேரோட்டத்தை முன்னிட்டு பெருமாளுக்கு அதிகாலை சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் தாயாருடன் பெருமாள் தேரில் எழுந்தருளினார். அதனை அடுத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்க நான்கு வீதிகளையும் வலம் வந்து அடைந்தது.