தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் சார்பில் சங்கமம் நம்ம ஊரு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு சென்னையில் 18 இடங்களிலும் , கோவை , தஞ்சாவூர் , வேலூர் , சேலம் , திருநெல்வேலி , காஞ்சிபுரம் , மதுரை மற்றும் திருச்சி ஆகிய 8 இடங்களிலும் நம்ம ஊர் திருவிழா நடத்தப்பட்டது.

இந்த ஆண்டு இந்த பகுதிகளில் நம்ம ஊர் திருவிழா நடத்தப்பட உள்ள நிலையில் இதற்கான கலை குழுக்களின் தேர்வு நடைபெற்றது.

திருப்பூர் பல்லடம் சாலை எல் ஆர் ஜி அரசு மகளிர் கலை கல்லூரியில் நடைபெற்ற இந்த தேர்வு முகாமில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாதஸ்வரம் , பரதநாட்டியம் , கிராமிய கலை நையாண்டி மேளம் , தப்பாட்டம் , வள்ளி கும்மி , துடும்பாட்டம் , பெருஞ்சலங்கை ஆட்டம் , உடுக்கை பாடல் பொன்னர் சங்கர் வாழ்க்கை வரலாற்று குழு , சிலம்பம் , நையாண்டி மேளம் , தேவராட்டம் , ஜிக்காட்டம் , திடம்பை இசை , மரக்கால் ஆட்டம், கரகம் , பறையிசை , தவில் , நாதஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு கலைக் குழுக்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

ஒவ்வொரு கலைக்குழுவின் நிகழ்ச்சிகளும் 5 நிமிட வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 8 இடங்களில் நடைபெற உள்ள சங்கமம் திருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு கலைப் பண்பாட்டு துறை தேர்வு குழுவினரால் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இவ்விழாக்களில் சிறப்பான நிகழ்ச்சி வழங்கிய கலை குழுவினர் மாநில அளவிலான தேர்வு குழுவால் தேர்வு செய்யப்பட்டு 2026 ஆம் ஆண்டு சென்னை சங்கமம் விழாவிலும் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பல்வேறு குழுக்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய நிலையில் 2வது நாளாக நாளையும் தேர்வு முகாம் நடைபெற உள்ளது.