
ஈரோடு அருகே, ஆலை கழிவுகள் டேங்கர் லாரிகள் மூலம் திருட்டுத்தனமாக ஓடையில் வெளியேற்றியதாக புகார்.சுமார் 8 கிமீ தொலைவிற்கு ரசாயன கழிவுகளால் நிறம் மாறிய தண்ணீர்.
உரிய நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட கிராம மக்கள் வலியுறுத்தல். ஈரோடு அருகே சட்ட விரோதமாக டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்பட்ட ஆலை கழிவுகள் ஓடையில் விடப்பட்டதால் சுமார் 8 கிமீ தொலைவிற்கு தடுப்பணைகளும், நிலத்தடி நீரும் மாசடைந்துள்ளன. நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயன கழிவுகளால் விவசாயமும், கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே ஆட்டையாம்பாளையத்தில் இருந்து பள்ளபாளையம் குளத்துப்பாளையம், மொக்கையாம்பாளையம், எல்லப்பாளையம் வழியாக கனிராவுத்தர் குளம் வரை செல்லும் ஓடை பின்னர் அங்கிருந்து ஈரோடு மாநகரை கடந்து காவிரி ஆற்றிற்கு செல்கிறது.. இந்த ஓடையில், பெருந்துறை சிப்காட் பகுதியில் இருந்து டேங்கர் லாரிகளில் கொண்டுவரப்பட்ட ரசாயன கழிவுகள் ஆட்டையாம்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக இந்த ஓடையில் நள்ளிரவில் திருட்டுத்தனமாக வெளியேற்றியதாக கூறப்படுகிறது.. இதனால் இந்த ஓடையின் தண்ணீர் செந்நிறமாக மாறியதுடன் ஓடையில் இருந்த மீன்களும் இறந்துள்ளன.
வழித்தடத்தில் உள்ள 3 குளங்களும், 4 தடுப்பணைகளும் மாசடைந்ததுடன் சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள 15.க்கும் மேற்பட்ட கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்திய போது பயிர்களும் கருகியதால் அச்சமடைந்த விவசாயிகள் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் புகார் அளித்தனர். இதன் பேரில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தி ஓடை நீரை சோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர் விசாரணையில் சிப்காட்டில் இயங்கி வரும் இரும்பு தொழிற்சாலை சட்டவிரோதமாக நச்சுத்தன்மை வாய்ந்த கழிவுகளை ஓடையில் கலந்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து பல மாதங்களாக இதுபோல் தண்ணீர் கலக்கப்பட்டு வருவதாகவும், அதிகளவு தண்ணீர் ஓடையில் சென்று கொண்டிருந்ததால் தண்ணீரின் நிறம் மாறிய போது தங்களுக்கு தெரியவில்லை என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர் தற்பொழுது ஓடையில் தண்ணீர் குறைவாக செல்வதால் அடர் வண்ணத்திற்கு தண்ணீர் நிறம் மாறியதுடன் முழுமையாக நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறிவிட்டதாக கூறினர்.
ஓடையில் கழிவுகளை கலந்த ஆலை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தடுப்பணைகளில் தேங்கியுள்ள நச்சு கழிவு நீரை பாதுகாப்பாக அகற்றுவதுடன் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.