திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அல்லாளபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் 40. என்ற விவசாயி தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து தக்காளி பயிரிட்டார். கடந்த 15 நாட்களாக விளைச்சல் உள்ள நிலையில் அதனை பறித்து திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைக்கு கொண்டு சென்றுள்ளார்.
15 கிலோ கொண்ட பெட்டி 100 ரூபாய்க்கு விற்பனையாவதாகவும் பறிக்கும் மற்றும் வாகனத்தில் கொண்டு செல்லும் கூலிக்கு கூட இந்த தொகை கட்டுப்படி ஆகாமல் தினந்தோறும் நஷ்டத்தை ஏற்படுத்தியதால் செந்தில்குமார் மணமடைந்து போனார். தனது மகளின் பள்ளி கட்டணத்தை தக்காளி விளைச்சல் மூலம் பெரும் வருவாயில் செலுத்தி விடலாம் என அவர் நினைத்திருந்த நிலையில் தற்போது தினம்தோறும் நஷ்டம் ஏற்பட்டதால் மனம் உடைந்து தக்காளி செடிகளை அழித்துவிட முடிவு செய்தார்
அதன்படி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இப்பகுதி பொது மக்களுக்கு தெரிவித்து தக்காளிகளை பறித்துச் செல்ல கூறியுள்ளார் அதனைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் விளைந்த தக்காளிகளை இலவசமாக பறித்துச் சென்றனர் பின்னர் மாடுகளை ஓட்டி மேய்ச்சலுக்கு விடுத்துள்ளார்.
தொடர்ந்து இன்று டிராக்டர் மூலம் உழவு ஓட்டி 2 ஏக்கரில் விளைந்திருந்த தக்காளி செடிகளை அழித்தார். இது குறித்து செந்தில்குமார் கூறுகையில் தக்காளி விளைவித்து தங்கம் வாங்க முடியாது தற்கொலை தான் செய்து கொள்ள வேண்டும் போல உள்ளது. இது போன்று விலை வீழ்ச்சி ஏற்படாமல் குறைந்த பட்ச விலை நிர்ணயம் செய்து தங்களை பாதுகாக்க வேண்டும் என மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.